Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. பட்டதாரி பெண்ணை ஏமாற்றி ரூ.6 லட்சம் மோசடி…. மாட்டி கொண்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!!

சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சந்தியா(24) எம்பிஏ பட்டதாரியாவார். இவர் சென்ற மே மாதம் வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் ஆன்லைனில் வேலை தேடினார். இந்நிலையில் வர்த்தக செயலி வாயிலாக வார சம்பளத்திற்கு வீட்டில் இருந்து சோப்பு பேக்கிங் செய்யும் வேலை தொடர்பான விளம்பரத்தை கண்டுள்ளார். அதில் ரூபாய்.5 ஆயிரம் -ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து சந்தியா அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, வாட்ஸ்-அப் வாயிலாக பேசிய மர்மநபர் ரூபாய்.5 ஆயிரம் முன் பணம் செலுத்தினால் உங்களுக்கு வேலை உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

அதன்பின் பணத்தை செலுத்தி முன் பதிவு செய்த சந்தியாவை 20 நாட்களுக்கு பின் தொடர்புகொண்ட அந்நபர் உங்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் எங்களது நிறுவனம் சார்பில் ரூபாய்.60 லட்சம் லாட்டரி அடித்துள்ளது. அதனை பெறுவதற்கு முன்பணமாக ரூபாய்.7.5 லட்சம் வரி சலுகையாக செலுத்துமாறு கூறியுள்ளார். அதனை உண்மை என நம்பிய சந்தியா தன் நகைகளை அடகுவைத்தும், உறவினர்களிடம் கடன் வாங்கியும் சுமார் ரூபாய்.6 லட்சம் வரை பணத்தை அடையாளம் தெரியாத அந்நபரின் வங்கி கணக்கில் தவணை முறையில் செலுத்தி இருக்கிறார். அதன்பின் சந்தியா பரிசுத் தொகை பற்றி மர்ம நபரிடம் கேட்டபோது, அவர் சரியாக பதில் அளிக்காமல் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சந்தியா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி ஆவடி துணை கமிஷனர் மகேஷ் தலைமையில், உதவி கமிஷனர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன் உள்ளிட்ட தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த மர்ம நபரின் செல்போன் நம்பரை வைத்து விசாரித்ததில் மோசடியில் ஈடுபட்ட நபர் சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மதன்குமார் (32) என்று தெரியவந்தது.

அதன்பின் காவல்துறையினர் மதன் குமாரை நேற்று கைது செய்து காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதன் குமார் போலியாக வர்த்தக ஆன்லைன் செயலி ஒன்றை உருவாக்கி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு வழங்குவதாக மோசடி செய்து சந்தியாவிடம் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. பின் காவல்துறையினர் மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நேற்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |