சென்னை வில்லிவாக்கம், பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் தில்லைவாணி (56). இவரது கணவர் சிரார்த்தனன்(67) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இந்த தம்பதியினரின் மகன் சூரியபிரதாபன் (36). இதில் சூரியபிரதாபன் என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி ஆவார். இவருடன் பிளஸ் 2 வரை பயின்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(36) ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். சென்ற ஏப்ரல் மாதம் தில்லைவாணியிடம் மணிமாறன் கூறியதாவது “மத்திய மந்திரி ஒருவரின் சிபாரிசில் தான் நான் ரயில்வேயில் பணிக்கு சேர்ந்தேன். அதேபோன்று உங்களது மகனையும் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் வேலையில் சேர்த்துவிடுகிறேன். அதற்காக ரூபாய்.12 லட்சம் செலவாகும்” என்று கூறினார்.
அதனை நம்பிய தில்லைவாணி அடுத்த சில தினங்களில் தன் கணவருக்கு தெரியாமல் 7 தவணைகளாக 42 பவுன் நகையை அடகுவைத்து ரூபாய்.12 லட்சத்தை மணிமாறனிடம் கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட மணிமாறன் தன் கூட்டாளி நாகேந்திரன் மற்றும் சிங் என்பவருடன் இணைந்து சூரியபிரதாபனுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்திலுள்ள கோண்டா எனும் இடத்தில் டிக்கெட் பரிசோதகர் வேலை கிடைத்துவிட்டது போல் போலியான பணி நியமன ஆணை, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தயார் செய்து அவரிடம் கொடுத்தனர். அதன்பின் பணிநியமன ஆணையை பெற்றுக் கொண்ட சூரிய பிரதாபன், லக்னோ சென்று அங்குவந்த ரயில் பெட்டியில் ஏறி பயணிகளிடம் சோதனை மேற்கொண்டார்.
இந்நிலையில் அங்குவந்த உண்மையான டிக்கெட் பரிசோதகர், சூரியபிரதாபனின் நடவடிக்கையை பார்த்து போலீசில் பிடித்து ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து லக்னோ காவல்துறையினர் சூரியபிரதாபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த தில்லைவாணி இது பற்றி ஐ.சி.எப். போலீசில் புகார் கொடுத்தார். எனினும் காவல்துறையினர் வழக்கை விசாரிக்க தாமதப்படுத்தியதால் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் நீதிமன்ற உத்தரவின்படி ஐ.சி.எப். குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலைவாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை கொடுத்து ரூபாய்12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மணிமாறனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உறுதுணையாகயிருந்த கூட்டாளிகள் மற்றும் சிலரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.