Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….! சோப்பு விற்பனை செய்வது போல நடித்து…. பெண்களை குறி வைக்கும் மர்ம கும்பல்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி மற்றும் சித்தோடு பகுதியில் வசிக்கும் 2 பெண்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் பரிசு விழுந்ததாக கூறி தங்களிடம் சிலர் பண மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின்படி வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கள்ளக்குறிச்சி சேலம் பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் தனியார் சோப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பது போல நடித்து பகல் நேரங்களில் ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் பணம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் 2 சோப்புகள் 50 ரூபாய்க்கு தருகிறோம். அதில் உள்ள பரிசு கூப்பனில் எந்த பரிசு விழுந்தாலும் அதனை உடனடியாக கொடுக்கிறோம் என ஆசை வார்த்தைகள் கூறுகின்றனர். இதனை நம்பி பெண்கள் சோப்பு வாங்கிய போது தோசை கல், குக்கர் போன்ற பரிசுகள் விழுந்தது. அந்த பொருட்களை மோசடி கும்பல் பெண்களிடம் கொடுத்து விடுகின்றனர். பின்னர் 100 ரூபாய் கொடுத்து மற்றொரு பரிசு கூப்பன் வாங்கினால் மெகா பரிசு கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி பெண்களின் வங்கிக் கணக்கு எண், செல்போன் எண் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட பெண்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உங்களுக்கு மொபட் பரிசு விழுந்துள்ளது எனக் கூறி ஏதோ ஒரு ஷோரும் முன்பு நின்று புகைப்படம் அனுப்புகின்றனர்.

இதனை நம்பிய பெண்கள் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கூறியதை நம்பி 12 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைக்கின்றனர். இதே போல் 7 பவுன் தங்க சங்கிலி பரிசு விழுந்ததாக கூறி சில பெண்களிடம் சரக்கு, சேவை வரியுடன் சேர்த்து 17,500 ரூபாய் அனுப்புமாறு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதனை நம்பி பணம் செலுத்திய பிறகு சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டால் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் என வருகிறது. இதே போல் மோசடி கும்பல் பல்வேறு இடங்களில் மோசடி செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |