இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதாரில் விவரங்களை உள்ளிடும் போது சில தவறுகள் நடைபெறுகின்றன.
இந்த தவறுகளால் பிற்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இப்படியான நிலையில் ஆதார் கார்டில் உள்ள தவறுகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஆதார் அமைப்பு ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கான தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது. ஆதார் கார்டில் ஏற்படும் தவறுகளால் பல நேரங்களில் மக்கள் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்குகின்றனர். ஆதார் கார்டில் உள்ள தவறுகளை திருத்த அதிக கட்டணம் செலுத்தவும் செய்கின்றனர்.
இந்நிலையில் ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஆகிய விவரங்களில் உள்ள தவறுகளை திருத்த 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகின்றது. இது தவிர ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கு 100 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் ஆதார் அப்டேட் செய்ய சொல்லும் மையத்தில் அதிக கட்டணம் வசூல் செய்தால் https://resident.uidai.gov.in/file-complaint என்ற இணையதளத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம்.