டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவுகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்களால் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாநகர் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாநகர் பகுதிகயில் ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம் 1,500 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.