தமிழ் நாட்டில் புதிய வகை காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சளி, காய்ச்சல், கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுடன் தினம்தோறும் ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதனை அவர்கள் கொரோனாவின் அறிகுறிகளாக மட்டுமே கருதக்கூடாது. இப்போது இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் இருந்தால் இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இந்த பாதிப்புகள் இருப்பவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் இந்த பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளை மருத்துவர்கள் நோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நிலையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு, கர்ப்பிணிகள், புற்று நோயாளிகள், பருமன் உள்ளவர்கள் நுரையீரல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏன்ட்டி வைரஸ் மருந்துகளை வழங்க வேண்டும். மேலும் தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.