தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக பிரமுகரான இவர் அந்த சுற்றுவட்டார பகுதியில் நடந்த மதமாற்ற நிகழ்வுகளை தட்டிக் கேட்டு வந்தார். மேலும் இதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் பரவிய நிலையில் கடந்த 2019ஆம் வருடம் பிப்ரவரி 5ஆம் தேதி ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் திருப்புவனத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா (37), கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத் (40), வடக்கு மாங்குடியை சேர்ந்த புர்ஹானுத்தீன் (31), திருவிடைமருதூரை சேர்ந்த ஷாகுல் ஹமீத் (30), திருமங்கலக்குடியை சேர்ந்த நஃபீல் ஹாசன் (31)ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே ஐந்து பேரையும் என்ஐஏ தேடி வருகின்றனர்.
இந்நிலையில் 5 பேருடைய புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களுடன் கூடிய போஸ்டர் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் ஒட்டியுள்ளனர். அதில் மேற்கண்டவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.