தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது புதிய கட்டுப்பாடாக அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல இன்று முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பண்டிகை நாட்களிலும் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த வருடம் தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்க வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களின் தொடக்கத்திலேயே தடை விதிக்கப்பட்டது.
இதனால் பக்தர்கள் கோயில் திறக்கப்பட்டிருக்கும் நாட்களை கணக்கில் வைத்து கொண்டு பாதயாத்திரையை மேற்கொள்ள திட்டமிட்டனர். இந்த நிலையில் தற்போது அடுத்த அறிவிப்பாக பக்தர்கள் இன்று முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை கோவில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தைப்பூச தேரோட்டம் காண வரும் பக்தர்கள் நேற்றே பழனி நோக்கி வந்து சேர்ந்ததால் அடிவார பகுதி, மலைக்கோயில் என பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டுள்ளது.