நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேருக்குக் கீழ் உழவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் 3 தவனைகளாக கொடுக்கப்படும்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விரைந்து பணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகள் தங்களது நில விவரம், வங்கிக்கணக்கு, ஆதார் எண்ணை சமர்ப்பித்து திட்டத்தில் சேரலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகள் கட்டாயம் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் அவர்களுக்கு நிதி கிடைக்காது. ஆதார் இணைப்புக்கான கால அவகாசத்தை சென்ற ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு நீட்டித்திருந்தது. அஸ்ஸாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும் 2021 மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிசம்பர் மாதம்தான் கடைசி அவகாசமாக அறிவிக்கப்பட்டது. அப்படி உங்களது ஆதாரை நீங்கள் இணைக்காமல் இருந்தால் உடனடியாக வங்கிக்குச் சென்று ஆதார் நகலை உங்களது கையொப்பத்துடன் வழங்கி இணைக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் ஆதாரை இணைக்கலாம்.