மக்கள் தேவை அறிந்து செயலியை உருவாக்கிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் எட்டிமடையை சேர்ந்த கோபாலன் என்பவரது மகன் திரிஷாந்து. தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தெரிந்த ஒருவர் மூலமாக ஐடி நிறுவனத்தில் பயிற்சி பணியாளராக தனது வேலையை தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தானாக ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் சின்னச்சின்ன செயலிகளான திசைகாட்டி போன்றவற்றை கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த செயலிகளை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் உபயோகப்படுத்த சொல்லி அவர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்தார். அதனையடுத்து ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பை உருவாக்கும் செயலியை உருவாக்கினார்.
தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை அந்த செயலியில் பதிவிட்டால், அதன் விலை மற்றும் விற்பவரின் முகவரி போன்றவை அதில் உடனடியாக வரும்படி அமைத்திருந்தார். மக்கள் மத்தியில் இந்த செயலிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும் ஊரடங்கு தளர்த்தப் பட்ட பிறகு செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் வகையிலான மைக்ரோ பிளாக் புகார் செயலியை திரிஷாந்து தயாரித்துள்ளார்.
இந்த செயலியை தற்காலிகமாக தனது கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இவர் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதனிடையே பல நிறுவனங்கள் திரிஷாந்தை அணுகி தங்கள் நிறுவனத்தின் வெப்சைட்டை டெவலப் செய்து தருமாறு கேட்டு வருகின்றனர். பொழுதுபோக்கு நிறைந்த செயலிகளை தயாரிக்காமல் மக்களுக்கு தேவைப்படும் செயலியல் தயாரித்ததால் மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.