அகிம்சையை கொள்கையாக ஏற்று அறவழியில் போராடி சுதந்திரம் எனும் 200 ஆண்டு கனவை நனவாக்கிக் கொடுத்த இரும்பு நெஞ்சம் கொண்ட ஆளுமை மகாத்மா காந்தி. அன்பை கொடுத்தால் பதிலாக அன்பே கிடைக்கும் என்ற பழமொழியை பொய்யாக்கி துப்பாக்கி குண்டை பரிசாக பெற்ற மகாத்மா காந்தி கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம்.
நாடு சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கி சரியாக ஆறு மாதம் தான் ஆகியிருந்தது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி ஒரு மாலை வேளை டெல்லியில் உள்ள பெர்ளா மாளிகையில் அனைத்து மத பஜனை கூட்டம் நடந்து முடிந்தது. காந்திஜி மெல்ல எழுந்து சென்றார். வழக்கறிஞரும் இந்து வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவருமான நாதுராம் கோட்சே தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் காந்திஜியை சரியாக மணி ஐந்து 17க்கு சுட்டார். துப்பாக்கியிலிருந்து சீறி பாய்ந்த குண்டுகள் காந்திஜியின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்தன. குண்டடிப்பட்ட காந்தி நிகழ்விடத்திலேயே மரணத்தை தழுவினார்.
உண்மையில் அந்த செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றது. காந்தியை சுட்டு விட்டார்கள் காந்தியை சுட்டது ஒரு முஸ்லிம் என்பதுதான் அந்த வதந்தி. சரியாக தகவலறிந்த கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் காந்திஜியை கொன்றவர் ஒரு இந்து என அறிவித்தார். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையால் ரத்தக் களறியாக கிடந்த இந்தியா ஒரு கலவர சூழ்நிலையில் இருந்து தப்பியது. காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஒரு காரணமாக அமைந்தது.
பிரிவினையின்போது இஸ்லாமியர் கொல்லப்படுவதை விரும்பாத காந்தி 1947 செப்டம்பர் 1-ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்க இருப்பதாக அறிவித்தார். அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. அது காலவரம்பற்ற உண்ணாவிரதம் என்பதால் அனைவரும் பதறி போயினர். கொல்கத்தாவில் ஒரு இஸ்லாமியர் வீட்டின் மாடியில் அவர் தங்கியிருந்தார்.
இந்துக்கள் பலரும் பாகிஸ்தானில் கொல்லப்பட்டு வரும் நிலையில் காந்திஜியின் செயல் பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பிரிவினைக்கும் இந்துக்கள் கொலை செய்யப்பட்டதற்கும் காந்தியின் பிடிவாதமே காரணம் என பலரும் நினைத்தனர். இதுவே அவரை கொன்று விட வேண்டும் என்ற வெறுப்பை வளர்த்தது.