மின்துறை ஊழியரிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே பெரிய சோழவல்லி கிராமத்தில் கோடீஸ்வர ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இந்த அலுவலகத்தில் கணக்காளராக மகாலட்சுமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி தன்னுடைய மகளின் திருமணத்திற்காக கோடீஸ்வர ஆனந்திடம் ரூபாய் 4 லட்சம் பணத்தை கடனாக கேட்டுள்ளார். அதற்கு கோடீஸ்வர ஆனந்த் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதன் காரணமாக மகாலட்சுமி வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும்படி கோடீஸ்வர ஆனந்திடம் கேட்டுள்ளார்.
அதன்படி கோடீஸ்வர ஆனந்தும் வங்கியில் இருந்து கடன் வாங்கி மகாலட்சுமியிடம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை மகாலட்சுமி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் கோடீஸ்வர ஆனந்த் மகாலட்சுமியிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மகாலட்சுமி பணத்தை கொடுக்க முடியாது என்று கூறி கோடீஸ்வர ஆனந்தை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து கோடீஸ்வர ஆனந்த் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகாலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.