ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கிடாலூர் மண்டலம் போடலகொண்டபள்ளியில் வசித்து வந்தவர் நாராயண ரெட்டி (26). இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் இவர் அதே ஊரைச் சேர்ந்த கந்துலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு ரவாளியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து ரவாளியை பெற்றோர் வலுக்கட்டாயமாக நாராயண ரெட்டியிடமிருந்து பிரித்து அழைத்து சென்று விட்டனர். தன் மனைவியை ஒப்படைக்குமாறு ரவாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் ரவாளியின் கருத்தைக்கேட்ட நீதிமன்றம், அவர் பெற்றோருடன் தங்கிகொள்ள உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் ரவாளிக்கு பெற்றோர் வேறுஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். எனினும் ரவாளி இதற்கு ஒத்துகொள்ளவில்லை. இதனால் ரவாளி, நாராயணரெட்டியுடன் போனில் அடிக்கடி பேசி வந்தார். இதன் காரணமாக கோபமடைந்த ரவாளியின் தந்தை வெங்கடேஸ்வர ரெட்டி, நாராயண ரெட்டியை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவருடைய உறவினரான சீனிவாச ரெட்டியை உதவிக்கு அணுகினார். அதனை தொடர்ந்து சீனிவாச ரெட்டி தன் கூட்டாலீகள் காசி மற்றும் ஆஷிக் போன்றோருடன் சேர்ந்து நாராயண ரெட்டியை காரில் கடத்தினார்.
பின் கஜாகுடாவிலிருந்து ஜின்னாரம் போகும் வழியில் நாராயணரெட்டி கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதன்பிறகு உடலை ஜின்னாரின் புறநகரிலுள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல்ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிச் சென்றனர். நாராயணரெட்டி வீடு திரும்பாததை அடுத்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நாராயண ரெட்டியின் செல்போனை ஆய்வு மேற்கொண்டு ஆஷிக்கை கைது செய்து விசாரித்ததில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ஆஷிக் கொடுத்த தகவலின்படி ஜின்னாரம் மண்டலம் நல்லுரு கிராமத்தின் புறநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில், சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேஸ்வர ரெட்டி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.