மகளைக் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த தாயை போலீசார் மிரட்டியுள்ளனர்.
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 16 வயது மகளை காணவில்லை என்று வனிதா என்பவர் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்டு முதலில் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர் புகாரின் மேல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி அவரை அனுப்பியுள்ளனர். மேலும் வனிதா புகாரின் மேல் ஏதேனும் நடவடிக்கை உண்டா? என்று கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தினமும் அலைந்து கொண்டிருந்தார். போலீசாரிடம் இருந்து எந்த பொறுப்பான பதிலும் இல்லை.
மகளை காணவில்லை என்று தவித்து நிற்கும் வனிதா பொறுமையை இழந்து போலீசாரிடம் ஆத்திரமாக கேட்கவும், அவரை கண்டபடி திட்டி மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள். இதனால் இந்திய தேசிய மாதர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சிபிஐ மற்றும் இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு இன்று முற்றுகையிட்டனர். வனிதாவின் உறவினர்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் காணாமல் போன சிறுமி குறித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி போலீசார் உறுதியளித்தனர்.