இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி பெயிண்டர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டம் அடுத்துள்ள வாணியங்குளத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது குயவன்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முருகேசனின் இரு சக்கர வாகனத்துடன் மோதியுள்ளது. இதனையடுத்து முருகேசன் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் முருகேசன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பின்னால் அமர்ந்து கொண்டிருந்த அவரது மகள் வினோதா எவ்வித காயங்களுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபாகரன் மற்றும் பாபு ஆகிய 2 வாலிபர்களும் படுகாயமடைந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.