தஞ்சையில் உலக மகளிர் தினத்தன்று , ஓட்டுரிமையை பணத்திற்காக விற்பதை தடுக்க வலியுறுத்தும் வகையில் உலக சாதனை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை பகுதியில், அணைக்காடு சிலம்பக்கூடத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ,தேர்தலில் ஓட்டுக்காக பணம் வாங்குவதை தவிர்க்க வலியுறுத்தி, உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் எஸ். இ. டி வித்யா தேவி பள்ளியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் மாணவி வர்ஷிகா கலந்து கொண்டார். இவர் செங்கப் படுத்தான்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து – மாலா தம்பதியினரின் மகள் ஆவார்.
இவர் இரண்டு மணி நேரத்தில் 23 கிலோமீட்டர் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். நிகழ்ச்சியை உதவி ஆட்சியர் பாலச்சந்திரன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்கள். சிறுமி பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஓட்டத்தை தொடங்கி ,அதிராம்பட்டி சாலை வழியாக 11 கிலோ மீட்டர் ஓடிச்சென்று, பின் பட்டுக்கோட்டை அண்ணா அரங்கம் வரை சுமார் 23 கிலோ மீட்டரை ,இரண்டு மணி நேரத்தில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த அந்த சிறுமிக்கு நோபல் உலகசாதனை நடுவரான அர்ச்சுனன் முன்னிலையில், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையரான சென்னுகிருஷ்ணன் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து , புனல்வாசல் டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 17 வயதுடைய 12-ம் வகுப்பு மாணவி சிவானி மற்றும் இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 14 வயதுடைய 9-ம்வகுப்பு மாணவி ஹரிணி ஆகியோர் , சிலம்ப போட்டியில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடர்ந்து 8 மணி நேரமாக சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர் .