வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் வசிக்கும் தன்னுடைய மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள் சந்திரவேலுவின் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கைப்பேசி மூலமாக சந்திரவேலுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரவேலு தன்னுடைய உறவினர்களை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.