பெண் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் பழனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வெங்கடேஸ்வரி அதே ஊரில் தனது கணவர் சுப்பிரமணியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு நாக மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வெங்கடேஷ்வரியின் தங்கை தமிழ் செல்வி என்பவர் அதே ஊரில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்செல்வியின் கணவர் இறந்து விட்டதால் தனது தாயார் பழனியம்மாளுடன் தமிழ்ச்செல்வி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பழனியம்மாளுடன் வீட்டில் வெங்கடேஸ்வரி, தமிழ் செல்வி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணி அளவில் திடீரென தூக்கத்திலிருந்து கண் விழித்த வெங்கடேஸ்வரி தமிழ்ச்செல்வியை தட்டி எழுப்பி தனது மகனுடன் பேச வேண்டும் செல்போனில் போன் செய்து கொடு என கேட்டுள்ளார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த தமிழ்ச்செல்வி காலையில் எழுந்து நாகமணி கண்ட எனக்கு போன் செய்யலாம் என கூறிவிட்டு தூங்கிவிட்டார்.
இதனால் கோபமடைந்த வெங்கடேஷ்வரி அரிவாள்மனையை எடுத்து தூங்கி கொண்டிருந்த தமிழ்ச்செல்வியின் கண், மூக்கு போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் தூக்கத்திலிருந்து கண் விழித்த பழனியம்மாள் தனது மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழ்ச்செல்வியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேஷ்வரிவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சொன்னதையே திரும்பத் திரும்ப வெங்கடேஸ்வரி கூறுகிறார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.