நாமக்கல் அருகே கணவன் ஃப்ரீ பயர் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளை விட மாணவர்கள் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் கேமிற்காக செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக அண்மையில் ஆய்வு ஒன்றும் தெரிவித்தது. பிரீ பையர் கேமின் காரணமாக பல மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஃப்ரீ பெயர் கேம் விளையாடிய கணவனை மனைவி திட்டியதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் எப்பொழுது பார்த்தாலும் செல்போனில் பிரீ ஃபயர் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று வழக்கம்போல் சக்திவேல் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது,மனைவி கடுமையாக திட்டியுள்ளார். இதனால் விரக்தியில் இருந்த சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.