தன்னைத் திருமணம் செய்து விட்டு பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார் அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த ராதிகா என்ற பெண் துணை கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் ஒன்றைக் கொடுக்க வந்தார். அப்போது அவர் கூறியதாவது “சென்னை வடபழனியில் இருக்கும் வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றேன். சென்ற வருடம் ஒரு வழக்கு சம்பந்தமாக கிண்டி காவல் நிலையம் வரை சென்றிருந்தேன். அங்கிருந்து அலுவலகத்திற்கு திரும்பிய சமயம் போலீசார் ஒருவர் என்னிடம் வந்து தனது பெயர் செல்வகுமார் என்று கூறியதோடு ஒரு போன் செய்ய வேண்டும் என்று எனது செல்போனை வாங்கினார்.
நானும் அவர் காவல் துறையில் பணிபுரிபவர் என்று நம்பி போனை கொடுத்தேன். ஆனால் அவர் எனது தொலைபேசியில் இருந்து அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின் எனக்கு போன் செய்து உங்களைப் பார்த்ததும் எனக்கு பிடித்துப்போனது. நான் உங்களை விரும்புகிறேன் எனக் கூறினார். நான் வீட்டில் வந்து முறைப்படி பேசும் படி கூறினேன். ஆனால் அவர் முதலில் திருமணம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு இருவரது வீட்டிலும் பேசலாம் என கூறினார்.
திருமணம் முடிந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். என் மீது மட்டுமல்லாது என் குழந்தைகள் மீதும் பாசமாக இருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில்தான் அவரது உண்மையான சொரூபம் எனக்கு தெரியவந்தது. ஒரு நாள் மது போதையில் அவர் தூங்கிக் கொண்டிருந்த சமயம் அவரது செல்போனை எடுத்து பார்த்தேன். அதில் அவர் பல பெண்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்த எனக்கு பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது. வாட்ஸ் அப்பிலும் பல பெண்களுடன் அவர் பேசி இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தான் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது பற்றி அறிந்தேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அந்தப் பெண்ணையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதற்கு நான் சம்மதம் தெரிவிக்காததால் எங்கள் இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் வீட்டிற்கு வருவதில்லை. எனது தொலைபேசி எண்ணையும் அவர் பிளாக் செய்து வைத்திருக்கிறார். என்னைப் போன்ற ஒரு பெண் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளேன்” என கூறினார்