போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையை ஒட்டி போலீஸ் கூண்டு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் போலீஸ் கூண்டில் ஏறி நின்று தன்னை சிலர் தாக்கியதாக கூறி சத்தம் போட்டு ரகளை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கீழே இறங்கி வருமாறு கூறியதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து சத்தம் போட்டு கொண்டிருந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அதற்குள் அருகில் இருந்த மின் வயரை வாலிபர் எட்டி பிடித்து இழுத்ததால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கோம்பை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான வேல்முருகன்(20) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.