குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் டவுன் காட்டூர் சாலை பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் செந்தில் என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் செந்தில் மளிகை கடையில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் 100 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் குட்காவை பறிமுதல் செய்து செந்திலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து ராசிபுரத்திற்கு கன்டெய்னர் லாரி மூலம் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் கடத்தி வருவதாக செந்தில் கூறியுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் சேலம் சாலையில் உள்ள வைரமலை ஆஞ்சநேயர் கோவில் அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி ஆக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியில் இருந்த 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான பெங்களூருவை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட செந்தில் மற்றும் மணிகண்டனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை பதிவு செய்யப்பட்ட 600 கிலோ குட்காவின் மதிப்பு 10 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.