பெங்களூருவில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரை தாக்கினால் அவர்களது பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்படும் என்று இணை போலீஸ் கமிஷனர் ரவி காந்தே கவுடா எச்சரித்துள்ளார்.
பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரவிகாந்த் கவுடா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, “பெங்களூருவில் கொரோனா காரணமாக குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை சோதனை செய்வதற்கு நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சமீபகாலமாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டி பெரிய அளவில் விபத்துகள் மற்றும் உயிர்பலி ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க முடிவுசெய்து நேற்று முதல் பெங்களூர் நகரில் 44 போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குடி போதையில் வாகனம் ஓட்டும் நபர்களை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் டிரைவர்கள் வாகன ஓட்டிகள் மது அருந்தி உள்ளார்களா என்பதை கண்டறிய அவர்களுக்கு தனித்தனியாக உரி குழாய் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்படும்.
சோதனையின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, போலீசாரை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு அவர்கள் ரவுடி பட்டியலில் சேர்க்கப்படுவர்.” இவ்வாறு அவர் கூறினார்.