போலி ஆவணங்களை தயாரித்து அதிகாரிப்போல் கையெழுத்திட்டு வீட்டுமனைகள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி பகுதியை சேர்ந்தவர்கள் அரசு மற்றும் தணிகைவேல். ஆரணியிலிருந்து ஆற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் வெள்ளேரி பகுதியில் சென்ற 2019 வருடம் ஆர்.பி.ஜி கார்டன் தொடங்கப்பட்டு அங்கு வீட்டுமனைகள் விற்பனை நடைபெற்றது. இங்கு உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாததால் தனி அலுவலர்களாக இருந்த ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் கையொப்பமிட்டு வீட்டுமனைகள் விற்கப்பட்டிருக்கின்றது.
அதனை வாங்கியவர்கள் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற விண்ணப்பித்துள்ளார்கள். இதையடுத்து வங்கி நிர்வாகம் ஆய்வுக்குட்படுத்திய பொழுது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்து இடவில்லை என தெரிந்தது. இதன் பின்னர் ஏமாற்றம் அடைந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்கள். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் போலியாவணங்களை தயாரித்து அதிகாரி போல கையெழுத்திட்டு வீட்டு மனைகளை அரசு மற்றும் தணிகைவேல் உள்ளிட்ட இருவரும் விற்பனை செய்து முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருக்கும் அரசு மற்றும் தணிகைவேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றார்கள்.