அரசு உயர்நிலை பள்ளி அருகில் மதுபான கடை வைக்க கூடாது என்று மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் பரணம் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் முந்திரி தோப்பு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஊர் பகுதிக்குள் கொண்டுவர மதுபான கடை ஊழியர்கள் திட்டமிட்டு, பரணத்திலிருந்து பிலாக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள ரோட்டின் ஓரத்தில் மதுபான கடையை அமைக்க முடிவு செய்தார்கள்.
இந்த ரோட்டின் வழியாகத்தான் பரணம் கிராமத்தில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல முடியும். மேலும் இந்த பாதை வழியாக பிலாக்குறிச்சி, வீராக்கன், நாகல்குழி உட்பட பல்வேறு பகுதியிலிருந்து 30-க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் மதுபான கடையை பரணம் உயர்நிலைப்பள்ளி அருகில் வைக்கக்கூடாது என்று மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று மாவட்ட கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார்கள். இதையும் மீறி இப்பகுதியில் மதுபான கடை அமைத்தால் மாணவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக கூறினார்கள்.