திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வார சந்தை மைதானத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு காய்கறி கடைகளை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி வார சந்தை மைதானத்தில் உழவர் சந்தை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வந்தனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த கடைகளை இஸ்லாமிய கல்லூரி முன்னுள்ள மைதானத்திற்கு அரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் காய்கறி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசின் விதிகளைப் பின்பற்றி காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த கடைகள் இயங்காததால் காய்கறி வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே…. வார சந்தை மைதானத்திற்கு வெளியே சாலை ஓரத்தில் காய்கறி மற்றும் பழக் கடைகள் வைக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வார சந்தை மைதானத்திற்குள் கடை வைக்க அனுமதி வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். போன லாக்டவுன்லேயே அனுபவித்துவிட்டோம். இதுக்கு மேல முடியாது எனவும் வியாபாரிகள் தங்களின் வேதனையை தெரிவித்துள்ளனர்.