கள்ளக்குறிச்சி மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் ஷ்ர்வன் குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்தப் பேரணியில் அவரும் கலந்து கொண்டார். இந்த சைக்கிள் பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயாப்பாளையம் ரோடு, காந்தி ரோடு, துருகம் மெயின் ரோடு வழியாக மாடூர் சுங்கச்சாவடி வரை 7கி.மீ தூரம் சென்று பின்னர் அதே வழியாக வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் நகராட்சி தலைவர் சுப்ராயிலு கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கள்ளக்குறிச்சி துணை போலிஸ் புகழேந்தி கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் ஷ்ர்வன் குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மக்கள் தாய் பூமி தன்னார்வலர் குழுக்கள் தயாரித்த வாகை மரம், தண்ணீர் பந்தல் மரம், மூங்கில் மர விதை பந்துகளை வழங்கினார். இதனையடுத்து 75வது சுதந்திர தின நினைவாக மரம் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், தன்னிலை மறந்து சுயநினை விழக்கும், போதை பொருள் பயன்பாட்டை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தவிர்த்து, போதை பொருள் விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறினார்.