போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் போதை பொருட்களை தடுக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த போதை பொருளை ஒழிப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்ரேஷன் கஞ்சா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். அதோடு போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இந்நிலையில் மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு தொடர்பான பாதகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இவர்கள் பள்ளியில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இதனையடுத்து கடைக்காரர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கவுன்சிலர் செல்வி பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர், கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.