பருகூர் மலை கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற இணைய வழி பயிற்சி வகுப்பை ஈரோடு மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பர்கூர் ஊராட்சி தாமரைக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மலைவாழ் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக வழிகாட்டும் மையம் போட்டி தேர்வுகளுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.கிருஷ்ணனுண்ணி பங்கேற்று வகுப்பை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் நிகழ்ச்சியில் பேசியதாவது, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் இணைய வசதியுடன் கூடிய இணைய நூலகம் செயல்பட்டு வருகின்றது. தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருகின்றது. இதையடுத்து தற்போது பர்கூர் மலைவாழ் இளைஞர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை வகுப்பானது சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது. இங்கு புத்தகம் மற்றும் கணினி வசதிகள் தேர்வுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில் மலைவாழ் மக்கள் பயன்படுத்திக் கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டுமென கூறியுள்ளார்.