துல்கர் சல்மானின் குருப் படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மீண்டும் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் குருப் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. மேலும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் ஷாக்கோ, சுரபி லக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளியான 5 நாட்களிலேயே ரூ.50 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் தற்போது குருப் படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் வசூலில் குருப் படம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.