மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றார்கள். இதனால் பள்ளியில் இருந்து பாதியிலே வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதுமான போக்குவரத்து வசதி இல்லாததே மாணவர்கள் பள்ளி இடைநிற்றலுக்கு காரணம் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சத்தியமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட குன்றி மலைப்பகுதியில் செயல்படும் குஜ்ஜம் பாளையம் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 102 குழந்தைகள் 8 கிலோமீட்டர் தொலைவு நடந்து வந்தால் தான் பள்ளியை அடைய முடிகின்றது. இதுபோல அந்தியூர் வட்டாரம் கொங்காடை மலைப்பகுதியில் 110 குழந்தைகள் அடர்ந்த வனப்பகுதியில் தினமும் 10 கிலோமீட்டர் பயணம் செய்து ஓசூர் உயர்நிலைப் பள்ளியை சென்றடைகின்றனர்.
யானைகள் உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் உள்ள பாதைகளில் பயணம் செய்வது பள்ளி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது. போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் வனவிலங்குகளையும் நீண்ட தொலைவையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பள்ளிக்கு நடந்தே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி பலரும் பள்ளிக்கு வருவதை தவிர்ப்பதால் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து இருக்கிறது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான மலைப் பகுதிகளில் மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் செயல்படும் பள்ளிகளுக்கு உரிய போக்குவரத்து வசதி கிடையாது. இதனால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மலைவாழ் பழங்குடியினமான மாணவர்கள் கல்வி கற்பதற்கு இது தடையாக இருக்கிறது. அதனால் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சாலை மற்றும் போக்குவரத்து வசதி செய்து கொடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என குழந்தைகளின் இடைநிற்றலை தடுத்து அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது என அதில் கூறப்பட்டிருக்கிறது.