மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு மாதம்தோறும் 10ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பணப் பற்றாக்குறை காரணமாக மாநகராட்சியை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி அக்டோபர் 28ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கினர். அதனால் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு நிதியமைச்சர், எம் எஸ் ஆர் டி சி ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு இணையாக உள்ளதாக கூறினார். தற்போது ஒரு வருடம் முதல் பத்து வருடங்கள் வரை பணியில் இருக்கும் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 5 ஆயிரம் ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதனால் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.12,080-ல் இருந்து ரூ.17,395 ஆக உயரும். இந்தப் பிரிவில் உள்ள ஊழியர்கள்குறைந்த அளவு சம்பளம் பெறுவதால் அவர்களின் ஊதியம் நாற்பத்தி ஒரு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் 10 முதல் 20 வருடங்கள் வரை சேவையில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் 4000 ரூபாய் அதிகரிக்கப்பட்டதால் அவர்களின் அடிப்படை சம்பளம் 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 23,040 ரூபாயாக உயரும். 20 ஆண்டிற்கு மேல் சேவை முடித்த ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 2,500 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. மாதம்தோறும் 10ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது.