இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை வாங்க முடியவில்லை. இதன் காரணமாக அப்பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனை வாங்க பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. மேலும் மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்டநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனால் அந்நாட்டு அதிபர் கோத்தபயராஜபக்சே பதவி விலக்கோரி அவரது அலுவலகம் எதிரில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோன்று பல்வேறு இடங்களில் தெருமுனை போராட்டங்களும் அதிபருக்கு எதிராக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் அந்நாட்டின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பலர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து காவல்துறையினர் விரிவான அறிக்கையளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை அதிபர் பதவி விலகக்கோரி 1 வாரம் வேலைநிறுத்தம் செய்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.