இலங்கையில் கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சீனாவிடம் கடன் பெற்றது. ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியாமல் திணறியது. இதனால் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கூட வாங்க முடியாமல் இலங்கை திணறி வருகிறது. இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதோடு, தினமும் மின்வெட்டும் பல மணி நேரம் நீடிக்கிறது.
அந்நாட்டில் டீசல் லிட்டர் ரூ.170-க்கும், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.280-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை நிதி மந்திரி சந்தித்துள்ளார். இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சா பிரதமர் மோடியை நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார்.
அந்த சந்திப்பின் போது பொருளாதார ரீதியில் இலங்கைக்கு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என்று பசில் ராஜபக்சா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் இந்தியா பொருளாதார நெருக்கடியில் திணறும் இலங்கைக்கு கடன் உதவியாக ரூ.7,580 கோடியை வழங்கியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் இலங்கை இடையே மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.