பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு நேர ஊரடங்கில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்த விவரத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தமிழக அரசு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு இரவு நேர ஊரடங்கில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு டவுன் பேருந்துகள் இரவு நேர ஊரடங்கில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரவு 9.30 மணி வரை இயக்கப்படும்.
சென்னைக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடைசி நேர அரசு பேருந்து 4.30 மணிக்கும், ஆத்தூருக்கு இரவு 8 மணிக்கும், விழுப்புரத்திற்கு இரவு 7 மணிக்கும், திருச்சிக்கு இரவு 8.30 மணிக்கும், துறையூர், லப்பைக்குடிக்காடு ஆகிய பகுதிகளுக்கு இரவு 9 மணிக்கும், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளுக்கு இரவு 9 மணிக்கும் தஞ்சாவூருக்கு 8.30 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த நேரங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.