தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 1-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனிடையில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பாக 2 ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பிப் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. அதே நேரம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட திருப்புதல் தேர்வானது இம்மாதம் நடந்து முடிந்தது.
தற்போது முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தல்படி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் முடிந்து, மார்ச் 14ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடத்தபடாமல் மாணவர்கள் அனைவருக்கும் “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்பட்டது. எனினும் நடப்பாண்டு கண்டிப்பாக பொதுதேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
அந்த அடிப்படையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான கால அட்டவணையானது தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து பொது தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வி அமைச்சர் வெளியிடுவதாக இருந்தது. எனினும் இந்த அறிவிப்பு திடீரென்று தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.