நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பொதுத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி தனித்தேர்வர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை மார்ச் 9 அதாவது நாளை முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிடப்பட்ட தேதி விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 18 முதல் 23 ஆம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் 500 ரூபாயும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆயிரம் ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.