தேமுதிக கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை. மேலும் ரொக்க பணமும் குறைவாக உள்ளது. இந்நிலையில் சொத்துவரி, மின் கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். தற்போது ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 21 பொருட்களுடன் 2,500 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஏழை,எளிய மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை தமிழக அரசு மறு பரிசீலனை செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்” என அந்த அறிக்கைகள் அவர் கூறியுள்ளார்.