இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டு பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக அரசு செங்கரும்பை கொள்முதல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
எனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுத்தொகுப்பு குறித்த மறுபரிசீலனை செய்து ஆயிரம் ரூபாய் ரொக்கமும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொருட்களுடன் கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றை சேர்த்து வழங்க வேண்டும். இதில் கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனுடன் கரும்பும், சேர்த்து வழங்கினால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். மேலும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து கரும்பு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது. மேலும் ரொக்கத்தை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.