தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரை 17 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்படும். இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அதிக அளவில் சென்று வருவார்கள். இதன் காரணமாகவே சென்னையில் இருந்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் பேருந்துகள் விடுவது வழக்கம். இதுபோன்ற காலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் ரயில் மற்றும் பேருந்துகளில் இடங்கள் பற்றாக்குறை ஏற்படும். இதனால் மக்கள் தனியார் பேருந்துகளை நாடும் நிலை உருவாகிறது. அதுமட்டுமில்லாமல் தனியார் பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை வசூல் செய்து வருவதால் சாதாரண மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதன் காரணமாக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் 2022 ஜனவரி மாதத்தில் வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்து முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து அதிக பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் போக்குவரத்து துறைக்கு இயக்கத்தில் இருக்கும் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளில் 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். ஆன்லைன் முறையில் மட்டுமின்றி நேரடியாக கோயம்பேடு பேருந்து நிலையங்களிலும் முன்பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.