நடிகர் அஜித் தற்போது லடாக் பயணம் மேற்கொண்ட நிலையில் அவரது பைக் தொடர்பான சர்ச்சை புதிதாக கிளம்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த கூட்டணியில் மேற்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் மூன்றாவது திரைப்படமும் ஹெச் வினோத் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வருகின்றது. நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், பல உலக நாடுகளுக்கு சென்று பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதைத்தொடர்ந்து தற்போது லடாக் வரை பைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் மணாலி உள்ளிட இடங்களில் அஜித் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதில் நடிகை மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். இதனிடையே அஜித்தின் பைக் பயணம் தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. லடாக் பயணத்திற்கு அஜித் பிஎம்டபிள்யூ ஆர் 1200 என்ற மாடலை பயன்படுத்துகிறார்.
கடந்த சில நாட்களாகவே அஜித் அந்த பைக்கை தான் பயன்படுத்தி வருகிறார். அஜித்தின் புகைப்படங்களில் அவருடைய பைக் எண் தெளிவாகத் தெரிகின்றது. இந்த பைக் எண் வைத்து இணையத்தில் தேடும்போது பல தகவல் வெளியாகி உள்ளது. இந்த பைக் நவம்பர் 2019 ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது என்றும், அஜித் குமாரின் பெயரில் தான் இந்த பைக் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020 நவம்பர் மாதமே இந்த பைக்குக்கான இன்சூரன்ஸ் முடிந்து விட்டது. எனவே இன்ஷூரன்ஸ் காலாவதியான பைக்கில் தான் அஜித் லடாக் வரை சென்றிருக்கிறாரா? என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.