பேஸ்புக் மூலமாக பழகிவந்த பெண் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா நாக்பூரை சேர்ந்த ஒருவருக்கு முகநூலில் கடந்த ஆகஸ்டு 14ம் தேதி இளம்பெண் ஒருவருடைய பெயரில் Friend Request வந்திருக்கிறது. அவரும் அதை அக்செப்ட் செய்திருக்கிறார். தொடர்ந்து அந்த பெண்ணுடன் 4,5 நாட்கள் சாட் செய்து வந்திருக்கிறார் அந்த நபர். ஒருநாள் பேஸ்புக் வாயிலாக அந்த நபரின் போன் நம்பரை அறிந்த அப்பெண் அவருக்கு வீடியோ கால் செய்திருக்கிறார்.
வீடியோவில் பேசும்போது அந்த பெண் அநாகரீகமாக நடந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த வீடியோ காலை தனது போனில் ரெக்கார்ட் செய்திருக்கிறார் அந்த பெண். இதையடுத்து, அடுத்தநாள் அவருக்கு போன் செய்த இளம்பெண், தனக்கு பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். அந்த நபரும் அப்பெண்ணிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தினமும் வீடியோ கால் செய்த இளம்பெண் தொடர்ந்து அநாகரிகமாக நடந்ததாக தெரிகிறது. ஆனால், அதையும் அந்த பெண் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறார்.
இதனையடுத்து தனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என இளம்பெண் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நபர் பணத்தை அனுப்பியிருக்கிறார். ஆனால், மீண்டும் ரூ.1 லட்சம் வேண்டும் என அந்த பெண் கூறவே வேறுவழியின்றி அந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு ரூ. 1 லட்சம் அனுப்பியிருக்கிறார். மருத்துவராக பணிபுரிந்து வரும் பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து அஜ்னி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அந்த இளம்பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.