தனியார் பேருந்து மீது அரிவாளை வீசிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் குமுளியில் இருந்து தேனியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்தை க.புதுபட்டியை சேர்ந்த சாம் என்பவர் ஒட்டி வந்தார். அப்போது போடேந்திரபுரம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ஒருநபர் பேருந்துக்கு வழிவிடாமல் சென்று கொண்டிருந்தார். இதனால் பேருந்து ஓட்டுனர் சாம் அந்த நபரை கண்டித்துள்ளார். இதனையடுத்து டிரைவருக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவதால் ஏற்பட்டுள்ளது.
இதற்குப்பின் அந்த நபர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு போடி விலக்குக்கு சென்றுள்ளார். மேலும் தனியார் பேருந்து போடி விலக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் திடீரென அரிவாளை எடுத்து பேருந்து மீது வீசியுள்ளார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறியுள்ளனர். இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் சாம் மற்றும் அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அந்த நபர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து பேருந்து டிரைவர் சாம் பழனிசெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்ததில் அந்த நபர் முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.