சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ஆவார். இவர் குரோம்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு மாணவி வீட்டுக்கு சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியது. இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகளால் தான் விபத்து ஏற்பட்டு மாணவியின் உயிரை பறித்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை, தாம்பரம் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை 3 பொக்லைன் எந்திரங்கள் வாயிலாக இடித்து அகற்றினர். சாலையை ஆக்கிரமிப்பு செய்தவாறு கடையின் முன் புறம் இருந்த அலங்கார முகப்பு, பெயர் பலகை ஆகியவைகளை அகற்றினர். பல்வேறு இடங்களில் பட்டா உள்ள இடங்களை எப்படி இடிக்கலாம்..? என கேட்டு அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.
இருப்பினும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். அதேபோன்று சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட நெற்குன்றத்தில் என்.டி.பட்டேல் சாலை, தாங்கல்கரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த 14 வீடுகள் மற்றும் ஒரு கடையை நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி பெண் ஒருவர் தீக்குளிப்பேன் என்றும் மிரட்டினார். இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டது.