அரசு பேருந்து கண்டக்டரை தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் அரசுப்பேருந்து கண்டக்டரான பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார், இவர் திருமங்கலத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் பேருந்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது நுங்கு வெட்டும் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூடகோவில் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் மது போதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளை பேசி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னிடம் இருந்த நொங்கு வெட்டும் அரிவாளை காண்பித்து பயணிகளை அவர் அச்சுறுத்தியுள்ளார்.
இதனை பார்த்த பால்பாண்டி கிருஷ்ணமூர்த்தியை கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி பால்பாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பால்பாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.