பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பர்சை நேர்மையாக திருநங்கை ஒருவர் எடுத்துக் கொடுத்துள்ளார்.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் காலையில் திருநங்கை ஸ்வீட்டி என்பவர் பயணிகளிடம் பிச்சை எடுப்பதற்காக அங்க நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறினார். அப்பொழுது ஒரு இருக்கையின் அடியில் பர்ஸ் கிடப்பதை பார்த்து அதை எடுத்து திறந்து பார்த்தபொழுது ரூபாய் 5000 மற்றும் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை இருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்வீட்டி அந்த பர்ஸை எடுத்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து கழக ஊழியரிடம் ஒப்படைத்து இதை தவறவிட்ட யாராவது தேடி வந்தால் கொடுத்து விடுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதன் பின்னர் மதியம் 12 மணியளவில் விஜிகுமார் என்பவர் நேர குறிப்பாளர் அறைக்கு வந்து தனது பரிசை தவறவிட்டு விட்டதாகவும் அதில் 5000 ரூபாய் இருந்ததாகவும் கூறினார். ஊழியர் பர்ஸுக்குள் என்னென்ன ஆவணங்கள் இருந்தது என கேட்ட பொழுது அவர் சரியாக சொன்னதால் பர்ஸை அவரிடம் ஒப்படைப்பதற்காக திருநங்கை ஸ்வீட்டியை தேடினார்கள்.
அப்பொழுது அவர் ஒரு பேருந்தில் பயணிகளிடம் கையேந்தி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை வரவழைத்து அவரின் முன்னிலையில் ஊழியர்கள் பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்தார்கள். பரிசை பெற்றுக் கொண்டவர் திருநங்கை ஸ்வீட்டிக்கு நன்றி தெரிவித்து ரூபாய் 500 நன்றி கடனாக கொடுத்துள்ளார். ஆனால் ஸ்வீட்டி அதை வாங்க மறுத்து எனக்கு அடுத்தவர்கள் பொருள் மீது ஆசை இல்லை. ஒருவேளை உணவுக்காக கடைக்காரர்கள், பேருந்து பயணிகள் கொடுக்கும் காசு எனக்கு போதும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதை கேட்ட அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.