பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் செல்வதற்கு நேற்று ஏராளமான பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாபநாசம் செல்லும் ஒரு பேருந்து வந்தது. இந்நிலையில் வீரவநல்லூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ஆறுமுகம் என்பவர் பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
இதில் ஆறுமுகத்தின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி சிதைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.