பரோலில் வெளி வந்துள்ள பேரறிவாளன் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு உடல்நிலை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 9-ம் தேதி பரோல் வெளியே வந்தார். இந்த நிலையில் பேரறிவாளனுக்கு நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டதால் மேலும் 15 நாட்களுக்கு பரோலை நீடிக்கும்மாறு அவரது தாயாரின் கோரிக்கையையும் ஏற்று மேலும் 15 நாட்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காலை ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறுநீரக நோய் மற்றும் மூட்டுவலிப் பிரச்சனைக்காக நான்கு தனியார் மருத்துவமனைக்கு பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.