தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தலின் விதிமுறைகளின் அடிப்படையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும்படையினர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே துணை தாசில்தார் ஸ்ரீதரன் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த பணத்தை ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் சந்திராவிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோல் கமுதி அடுத்துள்ள அபிராமம் பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி 95 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் பணத்தை அபிராமம் தேர்தல் உதவி ஆய்வாளர் முகமது ஆசிக் ராஜாவிடம் படைத்துள்ளனர். இதனைதொடர்ந்து பணத்தின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து இந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.