வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென அமெரிக்காவும் தென் கொரியாவும் வலியுறுத்தி வருகின்றனர்.
வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கும் அளவிற்கு அந்த ஏவுகணை திறன் கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் நிகழாண்டில் 13வது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஏவுகணை சோதனை வடகொரியா மேற்கொண்டுள்ளது. அணுஆயுதம் பொருந்தக்கூடிய இந்த ஏவுகணை குறைந்த தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் விரைவில் வடகொரியா அணு ஆயுத சோதனையும் நிகழ்த்த கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார தடைகளை தளர்த்த அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் வட கொரியா விற்கான சிறப்பு பிரதிநிதி சங் கிம்,கொரிய தீபகத்துக்கான தென் கொரியாவுக்கான பிரதிநிதி நோ கியூ-டுக்கை சியோலில் திங்கட்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, வடகொரியாவின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி அளிக்கவேண்டும் என ஒப்புக் கொண்டு இருக்கிறோம்.மேலும் வடகொரியாவுக்கு எதிரான நோக்கம் எதுவும் இல்லை. அந்த நாட்டுடன் எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருக்கிறது. வடகொரியாவின் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என கூறியுள்ளனர்.